×

பாபர் மஸ்ஜித் பிரச்னையை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் அடைந்த நிலை இனி தொடராது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அறிக்கை

நாகர்கோவில், நவ.13: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் ஷேக் அலி  தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நபில் அஹ்மத், பொருளாளர் நூறுல் அமீன்,  துணை தலைவர் கபீர்,  துணை செயலாளர்கள், முஹம்மது யாஸிர், செய்யது அஹமது, கியாசுத்தீன்,  மருத்துவ அணிச் செயலாளர் ஹஃபீஸ், மாணவரணிச் செயலாளர் ரியாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர இந்தியாவில் நீண்ட காலமாக  தீர்க்கப்படாமலிருந்த பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. பாபரி மஸ்ஜித் தீர்ப்பில் சட்ட அடிப்படை விதிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டு ஐநூறு ஆண்டுகள் ஆகிவிட்டதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அதே இடத்தில் கோவில் கட்டலாம் என்று அனுமதி வழங்கியது துளியும் ஏற்கும்படியாக இல்லை. பள்ளிவாசலை இடித்தது சட்டவிரோதம் என்ற உச்சநீதிமன்றம், குற்றவாளிகளுக்குரிய தண்டனையை பதிவு செய்யாமல் கடந்து சென்றதும் நியாயமாக தெரியவில்லை. இந்த வழக்கில் முஸ்லிம்களின் தரப்பாக உள்ள  சன்னி வக்பு வாரியம்  தீர்ப்பை முழுமையாக வாசித்து பின்னர் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறி உள்ளது கவனித்தக்கது. பாபர் மஸ்ஜித் பிரச்னையை வைத்து இந்திய முஸ்லிம்களுக்கிடையே அரசியல் கட்சிகள் ஆதாயம் அடைந்து கொண்டிருந்த நிலை இனி தொடராது. இந்திய இறையாண்மைக்கும், சகிப்புத்தன்மைக்கும் எடுத்துக்காட்டாக உள்ள இந்திய முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியான இத்தீர்ப்பிற்கு பிறகும் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாப்பார்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : parties ,Babri Masjid ,Tamil Nadu ,Dawheed Jamah ,
× RELATED ஒடிசாவில் ஒரே தொகுதியில் 3 கட்சிகளில் போட்டியிடும் உறவினர்கள்